சென்னை : கொரோனாவுக்கு ரூ.10க்கு கிடைக்கும் டெக்ஸாமெதாசோன் மருந்து பலனளிப்பதாக மருத்துவ நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவ வல்லுநர்கள், டெக்ஸாமெதோசான் என்ற மருந்து கொரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நபர்களையும் குணப்படுத்துகிறது என்று நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த மருந்து மிகக் குறைந்த விலையில் பரவலாக கிடைக்க வாய்ப்புள்ள மருந்து. கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள ஏழை நாடுகளுக்கு இந்த மருந்து மிகவும் உதவிகரமாக இருக்கும். மனித உடலின் நோய் எதிர்ப்பு, கொரோனா நோயை எதிர்த்து போரிடும்போது உடல் உறுப்புகளுக்கு ஏற்படும் சேதத்தை குணப்படுத்த இந்த டெக்ஸமெதோசான் பயன்படுகிறது.
இந்நிலையில், கொரோனா சிகிச்சைக்கு டெக்சாமெத்தாசோன் மருந்து பலனளிப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. இந்நிறுவனத்தில் உள்ள இந்திய டாக்டர்கள் கூறுகையில், டெக்சாமெத்தாசோன் மருந்து, கொரோனா நோயாளிகளில் அதிகமாகப் பாதிக்கப்பட்டோருக்கு நல்ல பலனைத் தருகிறது. வென்டிலேட்டரில் உள்ள நோயாளிகளில் மூன்றில் ஒருவருக்குக் குணமாகிறது. அதே போல், சுவாசிக்கத் திணறும் நோயாளிகளில் 5ல் ஒருவருக்கு நல்ல பலனைத் தருகிறது. எனினும், சாதாரண நோயாளிகளுக்கு பெரும் அளவில் பலன் தரவில்லை. இந்த மருந்து இந்தியக் கம்பெனிகளால் நிறையத் தயாரிக்கப்படுகிறது. இந்த மருந்து 10 மி.லி, வெறும் ரூ.10க்கே கிடைக்கிறது என்று தெரிவித்தனர்.