“என் குழந்தை நான் ஊட்டி விட்டால் மட்டுமே சாப்பிடுகிறான். அதுவும் போனில் வீடியோ காட்டினால் தான் வாயையே திறக்கிறான்” – இது இன்று 90 சதவீத வீடுகளில் நடக்கும் கதை.
குழந்தைகளை சுயமாக, தங்கள் கையால் சாப்பிட வைக்க சில எளிய வழிமுறைகள்:
- 1. சிந்தினால் சிந்தட்டும் (Embrace the Mess)
குழந்தைகள் சுயமாக சாப்பிடத் தொடங்கும் போது கட்டாயம் கீழே சிந்துவார்கள், முகத்தில் பூசிக்கொள்வார்கள். அதைத் தடுக்காதீர்கள். உணவை தொட்டு உணர்வதும், அதை வாய்க்கு கொண்டு செல்வதும் அவர்களின் மூளை மற்றும் நரம்பு வளர்ச்சிக்கான (Motor skills) மிக முக்கியமான பயிற்சி.
- 2. மொபைல் போனை தூக்கி எறியுங்கள்
ஸ்க்ரீனைப் பார்த்துக் கொண்டே சாப்பிடும் குழந்தைக்கு, தான் என்ன சாப்பிடுகிறோம், எவ்வளவு சாப்பிடுகிறோம், வயிறு நிறைந்துவிட்டதா என்ற எந்த உணர்வுமே இருக்காது. ஆரம்பத்தில் போன் இல்லாமல் சாப்பிட அடம் பிடிப்பார்கள். பசி எடுத்தால் தானாகவே சாப்பிடத் தொடங்குவார்கள்.
- 3. ஃபிங்கர் ஃபுட்ஸ் (Finger Foods)
இட்லியை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைப்பது, வேகவைத்த கேரட், ஆப்பிள் துண்டுகள், தோசை துண்டுகள் என அவர்களின் பிஞ்சு விரல்களால் சுலபமாக எடுத்துச் சாப்பிடும் உணவுகளை (Finger foods) முதலில் கொடுங்கள்.
- 4. குடும்பமாக ஒன்றாக அமர்ந்து சாப்பிடுங்கள்
குழந்தைகள் எதையும் பார்த்துதான் கற்றுக்கொள்வார்கள். குழந்தைக்கு தனியாக சாப்பாடு ஊட்டுவதை விட, வீட்டில் உள்ள அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுங்கள். நீங்கள் தட்டில் பிசைந்து சாப்பிடுவதைப் பார்த்தால், அவர்களுக்கும் தங்கள் தட்டில் உள்ள உணவை கையால் எடுத்து சாப்பிட வேண்டும் என்ற ஆர்வம் தானாகவே வந்துவிடும்.



