திருவரங்கத்தில் காவிரியாற்றின் மறுகரையில் ஒரு தீண்டத்தகாத குலத்தில் பிறந்தவர் திருப்பாணாழ்வார். தன் குலத்தின் காரணத்தால் கோயிலுக்குள் செல்ல தனக்குத் தகுதியில்லை என்று எண்ணிய அவர், ஆற்றின் மறுகரையில் நின்றபடியே தன் கையில் வீணையை வைத்துக்கொண்டு ரங்கநாதனை நினைத்துப் பாடித் துதிப்பார். அவர் இசையில் உலகமே மயங்கும், அந்த அரங்கனும் மயங்கினான்.
ஒருநாள், திருவரங்கக் கோயில் அர்ச்சகரான லோகசாரங்க முனிவர், இறைவனுக்கு திருமஞ்சனம் செய்ய காவிரியில் நீர் எடுக்க வந்தார். அங்கே திருப்பாணாழ்வார் கண்கள் மூடி தியானத்தில் பாடிக்கொண்டிருந்தார். முனிவர் அவரை விலகிப் போகுமாறு பலமுறை கூச்சலிட்டார். ஆனால் ஆழ்வாரின் காதுகளில் அது விழவில்லை. கோபமடைந்த முனிவர், ஒரு கல்லை எடுத்து ஆழ்வாரின் மீது வீசினார். கல் பட்டு ஆழ்வாரின் நெற்றியில் ரத்தம் வடிந்தது. திடுக்கிட்டு விழித்த ஆழ்வார், அவசர அவசரமாக மன்னிப்பு கேட்டுவிட்டு விலகிச் சென்றார்.
நீரோடு கோயிலுக்குச் சென்ற முனிவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. கருவறையின் கதவுகள் திறக்கப்படவில்லை. உள்ளே சென்று பார்த்தபோது, ரங்கநாதர் சிலையின் நெற்றியிலிருந்து ரத்தம் பீறிட்டு வழிந்து கொண்டிருந்தது! முனிவர் நடுங்கிப் போய் கீழே விழுந்தார்.
அன்று இரவு முனிவரின் கனவில் வந்த ரங்கநாதர், “என் பக்தனை நீ கல்லால் அடித்து விட்டாய். அவனுக்கு ஏற்பட்ட காயம் எனக்கே ஏற்பட்டது. நீ செய்த பாவம் தீரவேண்டுமானால், நாளை காலையில் அவனை உன் தோள்களில் சுமந்து கொண்டு கருவறைக்கு வா!” என்று உத்தரவிட்டார்.
மறுநாள் காலை ஓடோடிச் சென்ற முனிவர், ஆழ்வாரின் கால்களில் விழுந்து மன்னிப்புக் கேட்டார். ஆழ்வார் பதறினார். “என் போன்ற ஒரு பாவியை நீங்கள் சுமப்பதா?” என்று மறுத்தார். ஆனால் முனிவர் விடவில்லை. திருப்பாணாழ்வாரைத் தன் தோள்களில் சுமந்து கொண்டு காவிரியைக் கடந்து திருவரங்கக் கருவறைக்குள் நுழைந்தார் முனிவர்.
அரங்கனின் அழகைக் கண்குளிரக் கண்ட திருப்பாணாழ்வார், “அமலனாதிபிரான்…” என்ற பிரசித்தி பெற்ற பாசுரத்தைப் பாடினார். பாடி முடித்த மறுகணம், ஒரு ஜோதியாக மாறி ரங்கநாதனின் திருவடிகளில் இரண்டறக் கலந்தார்.



