காரைக்காலில் வாழ்ந்த பரமதத்தன் – புனிதவதி தம்பதியர் சிறந்த சிவபக்தர்கள். ஒருநாள் கணவன் இரண்டு மாம்பழங்களைக் கொடுத்து அனுப்பினான். மதிய வேளையில் பசியோடு வந்த ஒரு சிவனடியாருக்கு, அதில் ஒரு மாம்பழத்தை அமுது படைத்தாள் புனிதவதி.
மதியம் உணவருந்த வந்த கணவன், தன் மாம்பழத்தைக் கேட்டான். உள்ளிருந்த ஒரு மாம்பழத்தைக் கொடுத்தாள். பழம் மிகவும் ருசியாக இருந்ததால், மற்றொன்றையும் கேட்டான். கலங்கிப்போன புனிதவதி, உள்ளே சென்று ஈசனை நினைத்து உருகினாள். அவள் கைகளில் ஒரு தெய்வீக மாம்பழம் வந்து சேர்ந்தது. அதை கணவனுக்குக் கொடுத்தாள். அதன் சுவை உலகத்து மாம்பழம் போல இல்லாததைக் கண்ட கணவன் உண்மையைக் கேட்டறிந்தான்.
ஈசனே அவளுக்கு மாம்பழம் தந்தார் என்பதை அவனால் நம்பமுடியவில்லை. “மீண்டும் ஒருமுறை வரவழைத்துக் காட்டு” என்றான். புனிதவதி மீண்டும் வேண்ட, பழம் வந்து விழுந்தது! மனைவியின் தெய்வீகத் தன்மையைக் கண்டு அஞ்சிய கணவன், அவளை விட்டுப் பிரிந்து சென்று வேறொரு பெண்ணை மணந்து கொண்டான்.
இதையறிந்த புனிதவதி, ஈசனிடம் “என் கணவனுக்காகவே இந்த இளமையும் அழகும். அவரே என்னை உதறிய பிறகு இந்த உடல் எனக்கு எதற்கு? எனக்கு பேய் உருவம் தாரும்!” என்று வேண்டி, எலும்பும் தோலுமாக உருமாறினாள். அன்று முதல் ‘காரைக்கால் அம்மையார்’ என்று அழைக்கப்பட்டாள்.
தன்னுடைய பேய் உருவத்தோடு கயிலாயம் காணப் புறப்பட்டாள் அம்மையார். கயிலை மலையின் மீது கால்களை வைப்பது ஈசனுக்குச் செய்யும் அபச்சாரம் என்று கருதி, மலையின் அடிவாரத்திலிருந்து தலையாலேயே (கைகளை ஊன்றி) நடக்கத் தொடங்கினாள்.
அவள் வருவதைப் பார்த்த பார்வதி தேவி, “யார் இவர்?” என்று ஆச்சரியமாகக் கேட்க, சிவபெருமான், “இவள் நம்மைப் பேணும் அம்மை காண்!” என்று கூறி எழுந்து சென்றார். அம்மையார் கயிலையை அடைந்ததும், ஈசன் அவளை “அம்மையே!” என்று அன்போடு அழைக்க, அவள் “அப்பா!” என்று ஈசனின் திருவடிகளில் விழுந்து பேரின்பம் எய்தினாள்.



