காஞ்சிபுரத்தில் வாழ்ந்து வந்த திருமழிசையாழ்வாரின் சீடர் கணிகண்ணன். ஒருமுறை காஞ்சி மன்னன், தன்னைப் புகழ்ந்து ஒரு பாடல் பாடுமாறு கணிகண்ணனிடம் கேட்டான். “நான் அந்த நாராயணனைத் தவிர வேறு எந்த மனிதனையும் பாடமாட்டேன்” என்று கணிகண்ணன் மறுத்துவிட்டான். இதனால் ஆத்திரமடைந்த மன்னன், கணிகண்ணனை நாட்டை விட்டே வெளியேற்ற உத்தரவிட்டான்.
தன் சீடனுக்கு ஏற்பட்ட கதியை அறிந்த திருமழிசையாழ்வார், அவனுடன் தானும் நாட்டை விட்டுச் செல்வது என்று முடிவு செய்தார். செல்வதற்கு முன், காஞ்சி திருவெஃகாவில் பள்ளிகொண்டிருக்கும் பெருமாள் (யதோத்தகாரி) சந்நிதிக்குச் சென்றார்.
“கணிகண்ணன் போகின்றான் காமருபூங் கச்சி
மணிவண்ணா நீ கிடக்க வேண்டா – துணிவுடைய
செந்நாப் புலவனும் போகின்றேன் நீயுமுன்றன்
பைந்நாகப் பாய்சுருட்டிக் கொள்”
என்று பாடினார். அதாவது, “என் சீடன் கணிகண்ணன் போகிறான், நானும் போகிறேன். அதனால் நீயும் உன் பாம்புப் படுக்கையைச் சுருட்டிக்கொண்டு எங்களுடன் வந்துவிடு!” என்று உரிமையோடு இறைவனிடம் கூறினார்.
என்ன ஆச்சரியம்! ஆழ்வாரின் சொல்லுக்குக் கட்டுப்பட்ட இறைவன், அப்படியே தன் பாம்புப் படுக்கையைச் சுருட்டிக்கொண்டு அவர்கள் பின்னாலேயே நடக்கத் தொடங்கிவிட்டார்!
இறைவன் காஞ்சியை விட்டு வெளியேறிய மறுகணம், அந்த நகரத்தின் செழிப்பு, ஒளி, வளம் எல்லாம் மங்கி இருள் சூழ்ந்தது. அதிர்ச்சியடைந்த மன்னன், உண்மையை உணர்ந்து ஓடோடிச் சென்று கணிகண்ணன் மற்றும் திருமழிசையாழ்வாரின் கால்களில் விழுந்து மன்னிப்புக் கோரினான். நாட்டை விட்டுப் போக வேண்டாம் என்று கெஞ்சினான்.
சீடனும் குருவும் மன்னித்தனர். மீண்டும் திருமழிசையாழ்வார் இறைவனைப் பார்த்து, “கணிகண்ணன் வந்துவிட்டான், நானும் வந்துவிட்டேன். நீ மீண்டும் உன் பாம்புப் படுக்கையை விரித்துப் படுத்துக்கொள்” என்று பாடினார். இறைவனும் மீண்டும் வந்து அதே இடத்தில் சயனித்துக் கொண்டார். இதனாலேயே இத்தலப் பெருமாளுக்கு “சொன்ன வண்ணம் செய்த பெருமாள்” என்ற திருநாமம் நிலைத்தது.