திருவொற்றியூரில் வாழ்ந்த பெரும் செல்வந்தர் கலிய நாயனார். தினமும் திருவொற்றியூர் ஈசன் கோயிலில் மூவாயிரம் அகல் விளக்குகளை ஏற்றுவதைத் தனது வாழ்நாள் கடமையாகக் கொண்டிருந்தார். இவரது பக்தியைச் சோதிக்க விரும்பிய ஈசன், இவரது செல்வங்கள் அனைத்தையும் மாயமாகச் சுருக்கினார். வறுமையின் பிடியில் சிக்கிய நாயனார், எண்ணெய்க் கடைகளில் கூலி வேலை செய்தும், செக்கிழுத்தும் விளக்கேற்றினார்.
ஒரு கட்டத்தில் அதுவும் கிடைக்கவில்லை. தன் மனைவியை விற்கச் சந்தைக்கு அழைத்துச் சென்றார், ஆனால் யாருமே அவளை வாங்க வரவில்லை. மாலை நெருங்கிவிட்டது, ஈசன் சந்நிதியில் இருள் சூழத் தொடங்கியது.
பதறிப்போன கலிய நாயனார் ஓடோடிச் சென்று கோயிலுக்குள் நுழைந்தார். நெய் இல்லை, எண்ணெய் இல்லை. விளக்கின் திரிகளை எடுத்து அகலில் வைத்தார். சற்றும் யோசிக்காமல் ஒரு கூர்மையான கத்தியை எடுத்துத் தனது கழுத்தை அறுத்தார்! தன் உடலில் இருந்து பீறிட்டு வரும் ரத்தத்தையே எண்ணெயாகக் கொண்டு விளக்கேற்றத் துணிந்தார்.
அப்போது ஈசன் அவரது கரத்தைப் பிடித்துத் தடுத்தார். வெட்டப்பட்ட கழுத்தில் காயம் மறைந்தது. ரிஷப வாகனத்தில் உமாதேவியோடு காட்சியளித்த எம்பெருமான், கலிய நாயனாரின் தியாகத்தைப் புகழ்ந்து அவரைத் தன்னுடன் சிவலோகத்திற்கு அழைத்துச் சென்றார்.