மதுரை பாண்டிய மன்னனின் அவையில் முதன்மைப் பாடகராக இருந்தவர் பாணபத்திரர். சுந்தரேஸ்வரர் மீது அதீத பக்தி கொண்டவர். ஒருமுறை வடநாட்டிலிருந்து ஏமநாதர் என்ற கர்வம் பிடித்த மாபெரும் பாடகன் மதுரைக்கு வந்தான். அவனது சங்கீதத் திறமையை யாராலும் வெல்ல முடியவில்லை. பாண்டிய மன்னன், ஏமநாதனைப் பாணபத்திரர் வெல்ல வேண்டும் என்று கட்டளையிட்டான்.
ஏமநாதனின் அசுர சாதகத்தைக் கேட்ட பாணபத்திரர் பயந்துபோய், சுந்தரேஸ்வரரைச் சரணடைந்தார். தன் பக்தனைக் காப்பாற்ற ஈசன் திருவுளம் கொண்டார். அன்று இரவு, மழையும் குளிரும் வாட்டிய நேரத்தில், ஒரு விறகு வெட்டி உருவத்தில் தலையில் விறகுக் கட்டையோடு ஏமநாதன் தங்கியிருந்த மாளிகையின் திண்ணையில் ஈசன் ஒதுங்கினார்.
குளிரைப் போக்க, அந்த விறகு வெட்டி ‘சாதாரி’ பண்ணில் ஒரு தேவாரத்தைப் பாடத் தொடங்கினார். அந்த இசையின் இனிமையிலும், ஆழத்திலும் ஈரேழு உலகமும் மயங்கியது. மாளிகைக்குள் தூங்கிக் கொண்டிருந்த ஏமநாதன் திடுக்கிட்டு எழுந்து, விறகு வெட்டியிடம் வந்து, “நீ யார்?” என்று கேட்டான்.
“நான் பாணபத்திரரின் மாணவர்களில் ஒருவன். என் திறமை போதாது என்று அவர் என்னை விறகு வெட்ட அனுப்பிவிட்டார்” என்றார் ஈசன். ஒரு சாதாரண மாணவனே இப்படிப் பாடினால், குருவான பாணபத்திரர் எப்படிப் பாடுவார் என்று அஞ்சிய ஏமநாதன், இரவோடு இரவாகத் தன் உடமைகளை எடுத்துக்கொண்டு மதுரையை விட்டே ஓடிப் போனான். மறுநாள் விறகு வெட்டியாக வந்தது ஈசனே என்பதை உணர்ந்த மதுரை மக்கள் மெய்சிலிர்த்தனர்.



